தங்கத்தில் முதலீடு செய்ய சில வழிகள்

கடந்த பத்து ஆண்டுகளில் தங்கத்தின் வளர்ச்சி அபரிமிதமானது. சராசரியாக 150 சதவீத வளர்ச்சி கண்டிருக்கிறது. இது ஆண்டுக்கு 15 % வளர்ச்சி என்பதாகும். மேலும் தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாகவும் கருதப்படுகிறது. இந்த பதிவில் தங்கத்தின் மீதான முதலீடுகளுக்கு உள்ள வழிகள் அதன் நிறை குறைகள் முதலானவற்றை விரிவாக பார்ப்போம்.

தங்கத்தில் முதலீடு செய்வதென்பது இந்தியர்களின் இரத்தத்தில் வரும் ஒன்றாகும். இருப்பினும் அதனை நகைகளாக மட்டுமே செய்து வைத்திருக்கிறோம். நகை என்பது நல்ல முதலீடா ? வேறெந்த முறைகளில் எல்லாம் தங்கத்தில் முதலீடு செய்யலாம் ? எது சிறந்த வழி ? என்ற விடயங்களை எல்லாம் இந்த பதிவில் விபரமாக பார்க்கலாம்.

1) நகைகள்
இதுவே நம் பிரதான முறையாகும். ஆயினும், இது சிறப்பான முதலீட்டு முறை அல்ல. தங்கத்தின் வளர்ச்சியை மனதில் வைத்து முதலீடு செய்வதாக முடிவெடுத்தால் நகைகள் மூலம் அதன் பலனை முழுவதுமாக அனுபவிக்க முடியாது. ஏனெனில், தங்க நகைகளில் முதலீடு செய்யும்போது, செய் கூலி, சேதாரம் மற்றும் வரி (5% GST) என கிட்டத்தட்ட 15 முதல் 20 சதவீதம் அன்றைய தங்கத்தின் விலையை விட அதிகமாக விலை கொடுத்து வாங்குகிறோம். ஆகவே, இதனை சிறந்த முதலீடாக கருத இயலாது. மேலும் இது குறைந்தபட்ச பாதுகாப்பான முறையாகும். விற்கும் போதும் சேதாரம் கழித்துக்கொள்ளப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

2) தங்க கட்டிகள்
தங்கத்தை தங்கக்கட்டிகளாக வாங்கி முதலீடாக கருதும் வழக்கம் இந்தியாவில் பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே இருக்கிறது. இம்முறையில் சேதாரம் மிச்சமாகும் (999 கோல்ட்) ஆயினும் இதற்க்கும் வரி 5% உண்டு. இருப்பினும் தங்க கட்டி அல்லது நாணயங்களாகவும் சேமிப்பது தங்க நகைகளில் சேமிப்பதை காட்டிலும் அதிக லாபம் தரும். இது நகைகளில் முதலீடு செய்வதை காட்டிலும் சுமாராக 10 முதல் 15 சதவீத செலவினங்களை கட்டுப்படுத்தி லாபமாக மாற்றுகிறது. இதில் ஒரு குறை என்ன வெனில் பெரும்பாலான வங்கிகளில் தங்க கட்டிகளை அடகு வைக்க முடியாது. ஆகவே Muthoot போன்ற நிறுவனங்களின் 999 கோல்ட் பென்டன்ட்களாக வாங்கலாம். 999 கோல்டு என்றாலும் பென்டன்ட்களாக வாங்கினால் மட்டுமே அடகு வைக்க முடியும்.

3) டிஜிட்டல் கோல்ட்
தற்காலத்தில் இந்த டிஜிட்டல் கோல்டு முறை அமலுக்கு வந்துள்ளது. அதாவது நீங்கள் தங்க கட்டிகளாகவோ நாணயங்களாகவோ அல்லாமல் டிஜிட்டல் முறையில் தங்கத்தை வாங்கலாம். இம்முறையில் ஒரு ரூபாய் முதல் எவ்வளவு ரூபாய்க்கு வேண்டுமானாலும் வாங்க முடியும். கிராமாகவோ அல்லது குறிப்பிட்ட தொகையாகவோ தான் வாங்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிய தங்கத்தை விற்று பணமாக மாற்றிக்கொள்ளலாம் அல்லது தங்க நாணயமாக செய்து செய்கூலி செலுத்தி டெலிவரி பெறலாம். இப்போது இந்த வசதியை அமேசான், கூகுள்பே, போன் பே. பே டிஎம் என எண்ணற்ற நிறுவனங்கள் வழங்குகின்றன. கையில் நூறு இருநூறு என இருக்கும் பணத்தை வைத்து அவ்வப்போது வாங்கி சேமிக்க உதவுவதால் இதனை சிறப்பான சேமிப்பு முறையாக கருதலாம். இதன் குறைகள் என்று பார்த்தோமானால் விற்பனை செய்யும்போது அன்றைய விலைக்கு 2 முதல் 3 சதவீதம் குறைவாகத்தான் விற்பனை செய்ய முடியும், மேலும் இதற்கும் 5 % வரி உண்டு இவற்றை தவிர எல்லா வகையிலும் சிறந்த முதலீட்டு முறை டிஜிட்டல் கோல்டு முறையாகும்.

4) தங்க பத்திரங்கள் (கோல்டு பாண்ட்-sovereign gold bond)
தங்க பத்திரங்கள் 2015 முதல் அரசால் அங்கீகரிக்கப்பட்டு RBI ஆல் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் தங்கத்தை ஆபரணமாகவோ அல்லது கட்டிகளாகவோ வாங்காமல் அன்றைய தினத்தின் தங்க விலைக்கு அப்படியே வாங்கலாம். இதில் செய்கூலி, சேதாரம், வரி முதலியவை கிடையாது. இம்முறையில் ஒரு கிராம் முதல் 4கிலோ வரை தங்கத்தில் முதலீடு செய்யமுடியும். மேலும் இது டாக்குமெண்ட் வடிவாதலால் தொலைப்பது திருட்டு முதலியவற்றிலிருந்து பாதுகாப்பும் கிடைக்கும். டாக்குமெண்ட் வடிவில் இருந்தாலும் இதனை அடகு வைத்து லோன் பெறமுடியும். மேலும் இம்முறையில் வாங்கும்போது ஒரு கிராமிற்க்கு தங்கத்தின் அன்றைய விலையில் 50 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும் அத்துடன் ஆண்டுக்கு 2.5% வட்டியும் வழங்கப்படும். இதன் குறைகள் என்று பார்த்தால் இது 8 வருட லாக் இன் பீரியடுடன் வருகிறது. மேலும் லாங்க் டெர்ம் கேப்பிடல் கெயின்ஸ் என்று முதிர்வு தொகையில் 20% வரியாக பிடித்தம் செய்யப்படும். இருப்பினும் முறையாக கணக்கிட்டு பார்க்கும்போது மற்றைய எல்லா முறையகளையும் விட பாதுகாப்பான மற்றும் அதிக லாபம் தரக்கூடிய முறை என இந்த முறையே பெரிதும் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த தங்க பத்திரங்களை எந்த டீமேட் கணக்கிலும் வாங்கலாம்.

5) கோல்டு இடிஎப் (Gold ETF)
லாக் இன் பீரியட், ஜிஎஸ்டி, செய்கூலி சேதாரம் என்று எந்த செலவினங்களும் இல்லாமலும் இருக்க வேண்டும், தங்கத்தின் வளர்ச்சியை பொருத்து முதலீடும் பெருக வேண்டும் , அவ்வப்போது கட்டாயமற்று முதலீடு செய்யும் வசதியும் இருக்கவேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு ஏற்ற முதலீடு, கோல்டு இடிஎப் எனப்படும் GOLD ETF தான். இந்த இடிஎப், தங்கத்தின் விலை பொருத்து அமைகிறது. பல்வேறு நிறுவனங்கள் இப்போது கோல்டு இஎடிப் களை வழங்குகின்றன. இந்த கோல்டு இடிஎப், நிறுவனங்களை பொருத்து வெவ்வேறு விலைகளில் கிடைக்கின்றன. இவற்றை எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம் விற்கலாம். இதில் லாங்க் டெர்ம் கேபிடல் கெய்ன் டேக்ஸ் மட்டும் பிடித்தம் செய்யப்படும் (20%). இதனையும் மூன்றாண்டு களுக்குள் விற்றுவிடும்போது தவிர்த்துவிடலாம்.

வெகு பிரபலமான கோல்டு ETF கள் மற்றும் அவற்றின் ஒரு ஷேர் விலை பின் வருமாறு (25-10-2022 நிலவரம்)

Nippon India Gold Bees ETF – 43.26
Axis Gold ETF – 43.44
HDFC Gold ETF – 44.39
IDBI Gold ETF – 4,650.00
Kotak Gold ETF – 43.50
Quantum Gold ETF – 43.09
SBI Gold ETF – 44.75
Aditya BSL Gold ETF – 45.80
ICICI Prudential Gold ETF – 44.89
Invesco India Gold ETF – 4,535.00

இவற்றில் ஏதாவது ஒன்றை உங்கள் டிமேட் கணக்கின் உதவியுடன் வாங்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *