“மனிதர்களைப் புரிந்து கொள்ள… வாழ்க்கையை வெற்றி கொள்ள…”

1970 களில் டாடா ஸ்டீல் நிறுவனத்தார் உரப்பைகள் தைக்கும் குறிப்பிட்ட வகை மெஷின் ஊசி அனுப்ப சொல்லி ஜெர்மன் நிறுவனத்திற்கு கடிதம் எழுதுகிறார்கள்.

அங்கிருந்து பதில் வருகிறது. நாங்கள் அந்த வகை ஊசி தயாரிப்பதை மூன்று மாதங்களுக்கு முன்பே நிறுத்திவிட்டோம். அந்த வகை ஊசி தயாரிப்பதில்லை என்றாலும் அந்த ஜெர்மனிய நிறுவனம் வாடிக்கையாளரின் ஆர்டருக்கு பதில் அனுப்பி இருக்கிறார்கள். பாராட்டலாம் என்று தோன்றுகிறது அல்லவா? கொஞ்சம் பொறுங்கள். இன்னும் கொஞ்சம் தகவல் இருக்கிறது. கடிதம் அதோடு முடியவில்லை. எங்களிடம் இருந்தவற்றுள் சில ஊசிகளை சேகரித்து உங்களுடைய உடனடித் தேவைக்காக உடன் அனுப்பி இருக்கிறோம். காசு கூட வாங்காமல் அந்த ஊசிகளை அனுப்பி இருக்கிறார்கள்.

வேறுவிதமான ஊசி கொண்டு டாடா நிறுவனம் அவர்களின் வேலையை முடித்துக் கொள்ளலாம். ஆனால் அதைத் தேட அப்படிப்பட்ட வேறு ஒரு சப்ளையரை கண்டுபிடிக்க நாளாகுமே. இடைப்பட்ட நேரத்தில் நம்மை நம்பி நம்பிக்கை ஒரு வாடிக்கையாளர் சிரமத்துக்கு ஆளாக கூடாது என்று சிந்தித்து அதற்காக முயற்சி எடுத்து இருக்கிறார்கள் அந்த ஜெர்மனியின் நிறுவனத்தார்.

அதுதான் செய்தி செய்வதை பயன் கிடைக்குமாறு செய்ய வேண்டும்.

ஏகே செட்டியாரை தெரியாமல் யாரும் இருக்க முடியாது அவர் குமரிமலர் என்று ஒரு பத்திரிகை நடத்திக் கொண்டிருந்த நேரம் அது தமிழில் வெளிவந்த மிகச் சிறப்பான பத்திரிகைகளில் ஒன்று. இன்னும் பலரும் அதன் பிரதிகளை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார்கள்.

அமுதசுரபியின் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் அப்போது மாணவர். குமரிமலர் பத்திரிகை கடைகளில் விற்பனைக்கு கிடைக்காது என்பதால் ஆசிரியரும் வெளியிடுபவருமான ஏகே செட்டியாருக்கு தனக்கு பத்திரிகை அனுப்புமாறு கேட்டு சந்தா பணம் அனுப்புகிறார்.

ஏகே செட்டியாரிடம் இருந்து பணம் திரும்பி வருகிறது. கூடவே ஒரு பதிலும். குமரிமலர் 500 பிரதிகள்தான் அச்சடிக்கிறேன். சரியாக இருக்கிறது. அதனால் அனுப்ப இயலாது. உங்கள் ஊரில் இன்னார் சந்தா கட்டி பத்திரிகை வாங்குகிறார். அவரிடம் வாங்கி படியுங்கள்.

ஜெர்மன் நிறுவனம் செய்தது போலதான் இது. அனுப்ப இயலாது என்பது வரை சரி. உங்கள் ஊரிலேயே இன்னாரிடம் வாங்கி படியுங்கள் என்று தெரிவிப்பது தான் கூடுதல் முயற்சி.

அடுத்தவருக்கு செய்வதையும் அக்கறையாக செய்வது பயனுற செய்வது…

அந்த சமயம் புதுடில்லியில் அவர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். கோடைகாலம். விடுமுறை கோட்டில் வரும் வழக்குகளை பார்க்க வேண்டிய பணி. அன்றைய தினம் அதிகமான வழக்குகள் ஒவ்வொன்றாய் எடுக்கப்படுகிறது. விசாரணை நடக்கிறது. சில தள்ளி வைக்கப்படுகின்றன. சிலவற்றிற்கு தீர்ப்புகள் சொல்லப்படுகின்றன.

அவ்வளவு பரபரப்பான சூழ்நிலையிலும் நீதிபதியின் கண்கள் மொத்த கோட் வளாகத்தையும் அங்கு நடப்பனவற்றையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டிருக்கின்றன. முகத்தில் அதிக பதட்டத்துடன் ஒரு வழக்கறிஞர் தவித்துக் கொண்டிருப்பதை கவனிக்கிறார் நீதிபதி. உதவியாளரை விட்டு அந்த குறிப்பிட்ட வழக்கறிஞரை அழைக்கிறார். விபரம் கேட்கிறார்.

இந்த வழக்கறிஞரின் கட்சிக்காரர் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவர். அவருக்கு இறுதித் தேர்வு மறுநாள் தொடங்க இருக்கிறது. ஆனால் அவரை தேர்வு எழுத கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. காரணம் அந்த மாணவருக்கு வருகை பதிவு குறைவு. அந்த வழக்கு வரிசைப்படி வந்தால் தாமதமாகலாம். ஏன் அன்றைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் கூட போகலாம். அதனால் ஒரு மாணவன் படிப்பு கெடலாம் என்று நினைக்கிறார்.

நீதிபதி வழக்கை வரிசை மாற்றி எடுக்கிறார். விசாரணை முடிகிறது. விவரங்கள் கேட்டுக் கொண்டபின் தீர்ப்பளிக்கிறார். மாணவன் அட்டன்ட் செய்த ஸ்பெஷல் வகுப்புக்களையும் கணக்கெடுத்துக் கொண்டால் தேவைப்படும் குறைந்தபட்ச வருகைப்பதிவு நாட்கள் வருகிறது. அதனால் அந்த மாணவன் தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும். அதே சமயம் முழு விசாரணையின் போது தீர்ப்பு மாறலாம். அதனால் அவன் தேர்வுத் தாள்கள் திருத்தப்பட வேண்டும். ஆனால் முடிவுகளை தீர்ப்பு வரும்வரை வெளியிட வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

இதுவரை செய்ததே சிறப்பான பணி. அவ்வளவு பணியிலும் அதிலும் ஒரு நீதிபதி அவர் பதற்றமாக இருக்கிறார் என்றெல்லாம் கவனிக்க வேண்டிய அவசியமோ அப்படிப்பட்டவரை அழைத்து விசாரிக்க வேண்டிய தேவையோ இல்லை. பலரும் செய்வதில்லை. ஆனால் இவர் செய்திருக்கிறார். அதற்கு மேல் ஒரு படி மேலேபோய் நிலைமையின் அவசரத்தை புரிந்து கொண்டு வரிசை மாற்றி முன்னதாக அழைத்திருக்கிறார். விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார்.

தவிர ஆழ்ந்து யோசித்து ஸ்பெஷல் கிளாஸ்களும் கூட வகுப்புகள் போலதானே என்று மாணவனுடைய பக்கம் யோசித்து அதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்திருக்கிறார். மாணவனின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தேர்வு எழுத அனுமதிக்குமாறு உத்தரவு போடுகிறார். ஆனால் இறுதி முடிவு எடுக்காமல் முழு விசாரணைக்காக காத்திருக்கலாம் என்கிறார். இதுவரை கூட சரி.

அதற்கு மேலும் அந்த நீதிபதி யோசிக்கிறார். மாணவன் படிப்பது தஞ்சாவூரில் அல்லவா? வழக்கறிஞரிடம் இந்த உத்தரவு எப்படி கல்லூரி நிர்வாகத்தை சென்றடையும்? நேரம் இருக்கிறதா? தீர்ப்பால் பயன் கிடைக்குமா? பின்பு மேலும் சில வரிகளை தீர்ப்பில் சேர்க்கிறார். உத்தரவு கிடைப்பதற்கு முன் தேர்வு துவங்கி விட்டாலும் இந்த மாணவன் தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும். அவன் தேர்வு எழுத துவங்கிய நேரத்தில் இருந்து அவனுக்கான அந்த நேரம் கணக்கிடப்பட வேண்டும்.

இப்படி செய்தவர் ஏதோ ஐம்பது , நூறு அல்ல மொத்தம் லட்சத்துக்கு அதிகமான தீர்ப்புகள் கொடுத்தவர். ஆம் அவர் தமிழகத்தைச் சேர்ந்த நீதியரசர் ஆர்.எஸ். இலட்சுமணன். பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதியானவர்.

பெயருக்காகவும் கடமைக்காகவும் செய்வதில்லை. சிலர் செய்தால் பயனுறச் செய்கிறார்கள். கேட்காமலே செய்கிறார்கள். மற்றவர்களுக்காக அவர்கள் யோசிக்கிறார்கள். கூடுதல் முயற்சி எடுத்துச் செய்கிறார்கள். செய்வன திருந்தச் செய் என்பதோடு சேர்த்து செய்வதை முழுப்பயன் கிடைக்கும் வகையில் செய்கிறார்கள்.

” மனிதர்களைப் புரிந்து கொள்ள… வாழ்க்கையை வெற்றி கொள்ள… “

image 3

For news Visit newscube24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *